கோவை: அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள் - பயணிகள் அச்சம்


கோவை: அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள் - பயணிகள் அச்சம்
x

கோவை-மஞ்சூர் சாலையில் காட்டு யானைகள் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அறிவிப்பு பலகைகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.

கோவை,

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கோவையில் இருந்து மஞ்சூருக்கு கடைசி அரசுபஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மெத்தை பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. இதனால் அரசு பஸ் உள்பட பினாள் வந்த ஒரு சில வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. மேலும், யானைகள் சாலையோரம் உள்ள மரக்கிளைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகள், சாலையோர மரக்கிளைகளை உடைத்து துவம்சம் செய்தன.

பின்னர் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதும், வாகனங்கள் சென்றன. யானைகள் அவ்வப்போது சாலையின் குறுக்கே நின்று வாகனங்கள் செல்ல முடியாமல் அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,

அவ்வப்போது பெய்து வரும் மழையால் பசுமையாக காணப்படும் வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் காட்டு யானைகள் சாலைகளில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானையுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கக் கூடாது.

அதேபோல் அதிகமாக சத்தம் எழுப்பி யானைகளை அச்சுறுத்தக் கூடாது. குறிப்பாக யானைகள் சாலையில் நிற்கும் போது வாகனங்களில் சாலையை கடக்க முயற்சி செய்யக் கூடாது. யானைகள் சென்ற பின்னர் தான் சாலையை கடக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story