பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை


பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x

பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

வருவாய் துறை, போலீஸ் துறை, தீயணைப்புத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோர் மழை பகுதிகளுக்கான கிராம, வார்டு அளவிலான வரைபடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிராம அளவிலான முதல் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தற்காலிக நிவாரண முகாம்கள், முழுமையாக தணிக்கை செய்து தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

புதிதாக மழை நீர் சூழ்ந்த பகுதி ஏதும் கண்டறியப்பட்டால் அதன் விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். முதல் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து குழுக்களிலும் பெண்கள், தன்னார்வலர்கள் உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அவசரகால சூழ்நிலைகளில் பங்கெடுத்து பணியாற்றும் வகையில் தனியார் நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், ஆயில் கார்பரேஷன் நிறுவனங்கள் அடங்கிய கோட்ட அளவிலான கூட்டம் நடத்தி பேரிடர் காலத்தில் பங்காற்ற அறிவுறுத்த வேண்டும்.

தாசில்தார்கள் மழைமானி நிலையங்களை ஆய்வு செய்து அவை நல்ல முறையில் செயல்படுவதையும், இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான பொது கட்டிடங்களை தணிக்கை செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கால்வாய்கள், நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு பகுதிகளை அதிகரிக்க வேண்டும். செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகாதவாறு கழிவுநீர் கால்வாய்களில் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் பட்சத்தில் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலையில் உள்ள குழிகளை மூட வேண்டும்.

பள்ளி கட்டிடங்கள் உறுதியுடன் இருப்பதையும், அவசர காலங்களில் நிவாரண மையமாக செயல்பட ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள் வெள்ள பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கும் பகுதிகளில் முன்னதாக கால்நடை நிவாரண மையங்கள் அமைக்க வேண்டும்.

மின்சாரத் துறை அலுவலர்கள் தாழ்வாக உள்ள மின் கம்பிகள், பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் இணைப்புகளை சரிபார்த்து மின்கசிவு ஏற்படாதவாறும், மரக்கிளைகள் மின் இணைப்புகளில் உரசாத அளவிற்கு சுத்தப்படுத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மகளிர் திட்ட இயக்குனர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story