காஞ்சீபுரம் அருகே கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


காஞ்சீபுரம் அருகே கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

காஞ்சீபுரம் அருகே கலெக்டர் டாக்டர் ஆர்த்தி போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் செவிலிமேடு மேம்பாலம் வழியாக செய்யாறு, வந்தவாசி, திண்டிவனம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கான போக்குவரத்தும், மாங்கால் கூட்டு சாலையில் அமைந்துள்ள சிப்காட் பகுதிக்கு தொழிற்சாலை பஸ்களும் கல்குவாரி தொழிற்சாலை கனரக வாகனங்கள் மற்றும் காஞ்சீபுரம் நோக்கி அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனம் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் கடந்த ஓராண்டாக பாலத்தில் சாலை பகுதியில் அதிக அளவு பள்ளங்கள் ஏற்படுவதாகும், அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிவதாகும். புகாரின் அடிப்படையில் அதனை நெடுஞ்சாலைத்துறையினர் அவ்வப்போது சரி செய்தும் வந்தனர். விரிசல் ஏற்பட்டதுடன், பல இடங்களில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இ்ந்த நிலையில் தற்போது 2 தூண்களின் இணைப்பு பகுதியில் பெரும் விரிசல் ஏற்பட்டு இரும்பு கம்பி அனைத்தும் ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

தற்போது பாலத்தின் மையத்தில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்வதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் வந்ததின் பேரில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் ஆகியோர் நேரில் சென்று மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலை துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும் பணிகள் நடைபெறும் வரை எச்சரிக்கை பலகை வைத்து எச்சரிக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா காவாந்தண்டலம் கிராமத்தில் பாய்ந்து ஓடும் செய்யாற்றின் கரையோரத்தில் வாலாஜாபாத்தில் இருந்து உத்திரமேரூருக்கு செல்லும் மாநில அரசு நெடுஞ்சாலை அமைந்துள்ளது. காவாந்தண்டலம் கிராமத்தின் வழியாக செல்லும் செய்யாற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அருகில் இருந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் மணல் அரிப்பு ஏற்பட்டு சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மணல் அரிப்பால் நெடுஞ்சாலை சேதம் அடைந்தது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சரி செய்து தர அந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்திருந்தனர். கிராமப்புற மக்களின் கோரிக்கையை ஏற்று 400 மீட்டர் தூரம் வரை ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் காவந்தண்டலம் கிராம செய்யாற்றின் ஓரத்தில் தடுப்புச்சுவர் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி காவாந்தண்டலம் கிராமத்தில் செய்யாற்றின் கரையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கப்பட உள்ள நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் ஆகியோர் காவாந்தண்டலம் செய்யாற்று பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமான விவரங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பெரியண்ணன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.


Next Story