மாதவரத்தில் 2 அண்ணன்களை அரிவாளால் வெட்டிய கல்லூரி மாணவர்
அண்ணன்-தம்பிகள் இடையே ஏற்பட்ட தகராறில் 2 அண்ணன்களை கல்லூரி மாணவர் அரிவாளால் வெட்டினார். 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை அடுத்த மாதவரம் தணிகாசலம் நகர் திருமால் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 50). இவருடைய மனைவி சூலச்சம்மா(48). இவர்கள் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள். மாதவரம் அருகே ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு சுரேஷ்(26), சீனிவாசன்(24), ஸ்ரீகாந்த்(20) என 3 மகன்கள். இவர்களில் சுரேஷ், சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்திலும், சீனிவாசன் சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியிலும் வேலை செய்து வருகிறார்கள். ஸ்ரீகாந்த், கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வெங்கடேசும், அவருடைய மனைவியும் தங்கள் மூத்த மகன் சுரேசுக்கு பெண் பார்க்கும் விஷயமாக ஆந்திராவுக்கு சென்று விட்டனர். வீட்டில் அவர்களுடைய 3 மகன்கள் மட்டும் இருந்தனர்.
நேற்று காலை அண்ணன்-தம்பி 3 பேருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. 3 பேரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த், வீட்டின் சமையலறையில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தனது அண்ணன்களான சுரேஷ், சீனிவாசன் 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். மேலும் அண்ணன்கள் தாக்கியதில் ஸ்ரீகாந்தும் படுகாயம் அடைந்தார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அண்ணன்-தம்பிகள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுரேஷ், சீனிவாசன் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 3 பேரும் படுகாயத்துடன் சிகிச்சை பெறுவதால் அவர்களுக்குள் எதற்காக மோதல் ஏற்பட்டது? ஸ்ரீகாந்த், எதற்காக அண்ணன்களை அரிவாளால் வெட்டினார்? என்பது குறித்து விசாரிக்க முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.