சென்னையை குப்பை இல்லா நகரமாக மாற்ற மாநகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்


சென்னையை குப்பை இல்லா நகரமாக மாற்ற மாநகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
x

சென்னையை குப்பை இல்லா நகரமாக மாற்ற மாநகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை

சென்னையை அடுத்த பெருங்குடி குப்பைக்கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயிரி அகழ்ந்தெடுத்தல் (பயோ மைனிங்) பணி மற்றும் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு மையத்தின் செயல்பாடுகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, கூடுதல் கமிஷனர் சங்கர்லால் குமாவத், தெற்கு வட்டார துணை கமிஷனர் எம்.பி.அமித், தலைமை பொறியாளர் மகேசன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளில் தனிக்கவனம் செலுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நான் 2,000-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது 2 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் குப்பைகள் நாள்தோறும் சேர்ந்தது. ஆனால் இப்போது 5 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் குப்பைகள் நாள்தோறும் சேர்கிறது. இந்த குப்பைகள் பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இதேபோல, பெருங்குடி குப்பை கிடங்கு பகுதியை மீண்டும் தூய்மையான பகுதியாக மாற்றும் வகையில் குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணி 6 பகுதியாக நடந்து வருகிறது.

இதில் 3 பகுதியில் 90 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டது. குப்பைகளை தொழில்நுட்ப ரீதியாக பிரித்து அகற்றிவிட்டோம் என்றால் அப்பகுதி தூய்மையானதாக மாறிவிடும். சென்னையில் தனி நபர் மூலம் உற்பத்தியாகும் குப்பை 500 கிராமில் இருந்து 680 கிராமாக அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் இதை உணர்ந்து வீட்டில் உள்ள குப்பைகளை தெருக்களிலும், கட்டிட கழிவுகளை நீர்வழித்தடங்களிலும் கொட்டக்கூடாது. சென்னை மாநகரை குப்பை இல்லா நகரமாக மாற்றுவதற்கு மாநகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதேபோல, அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

தடையை மீறி இரவு நேரங்களில் நீர் வழித்தடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய அறிவுறுத்தியுள்ளோம். குப்பைகளை முறையாக அகற்ற தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். குப்பைகளை அகற்றுவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story