காவிரி பாசன விவசாயிகளின் பயிர்களுக்கு இழப்பீடு அறிவிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
காவிரி பாசன விவசாயிகளின் பயிர்களுக்கு இழப்பீடு அறிவிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
"நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரில் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த குறுவை நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் எம்.கே.ராஜ்குமார் என்ற உழவர் உயிரிழந்திருக்கிறார். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தர வேண்டிய கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு பெரும் தோல்வி அடைந்துவிட்டது. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் எந்த பயனும் ஏற்படாது. கருகும் பயிர்களைக் காக்க அந்த நீர் போதாது.
பெரும்பான்மையான பயிர்கள் கருகிவிட்டதால் சேதமடைந்த குறுவை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதன் மூலமாக மட்டுமே சிக்கலுக்கு தீர்வு காண முடியும். எனவே, சேதமடைந்த குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.