கவர்னர் மாளிகை தரப்பில் அளித்த புகார் உண்மைக்கு புறம்பானது - டிஜிபி


கவர்னர் மாளிகை தரப்பில் அளித்த புகார் உண்மைக்கு புறம்பானது - டிஜிபி
x

கோப்புப்படம் 

கவர்னர் மாளிகை தரப்பில் அளித்த புகாரில் உள்ளது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்று டிஜிபி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த நபர் தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர கவர்னர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவுசெய்யவில்லை என காவல்துறை மீது கவர்னர் மாளிகை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் முழுமையான, நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தமிழக டிஜிபி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கவர்னர் மாளிகை தரப்பில் அளித்த புகாரில் உள்ளது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. பெட்ரோல் குண்டு வீசியவர் கவர்னர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டது என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது. கவர்னர் மாளிகை மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது.

நேற்று நடந்த சம்பவம் தனிப்பட்ட நபரால் கவர்னர் மாளிகை வெளியே சாலையில் செய்யப்பட்ட செயலாகும். காவலர்கள் விழிப்புடன் செயல்பட்டதால் உடனடியாகக் குற்றவாளி கைது செய்யப்பட்டார். பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் முழுமையான, நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும்.

கவர்னர் மற்றும் கவர்னர் மாளிகைக்கு தமிழக காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.


Next Story