மாநிலக்கட்சிகள் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது - டி.ஆர்.பாலு
மாநிலக்கட்சிகள் இல்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது என்று டி.ஆர்.பாலு கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று காலை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு வளாகத்துக்கு வெளியே விஜய் சவுக் பகுதிக்கு வந்தனர். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது:-
அதானி பிரச்சினையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கவேண்டும் என கடந்த 2 வாரங்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து பதில் இல்லை. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பெரும்பான்மையாக இருப்பது பா.ஜனதா உறுப்பினர்கள்தான். இருந்தும் அதை அவர்கள் அமைக்க மறுக்கிறார்கள். தேர்தல் வர இருக்கும் நேரத்தில் உண்மை வெளியே தெரிந்துவிடும் என கூட்டுக்குழுவை அமைக்கவில்லை.
இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ராகுல்காந்திக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. ஜனநாயகம் மீண்டும் தழைத்து வரவேண்டுமானால் இந்தியாவில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சிக்கு வரும் வாய்ப்பை தேடிக்கொள்ளவேண்டும். நாங்கள் தீர்ப்புக்கு எதிராகப் போராடவில்லை. பிரதமர் மோடிக்குத்தான் கண்டனம் தெரிவிக்கிறோம்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நிச்சயம் 100 சதவீதம் தொடரும். ஏன்? என்று கேட்டீர்கள் என்றால், எல்லோருமே ஒத்த கருத்து உள்ளவர்களாக இருக்கிறார்கள். மாநிலக்கட்சிகள் இல்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது. ஆட்சியும் நடத்தமுடியாது. மாநிலக்கட்சிகளை சேர்த்து காங்கிரஸ் வழிநடத்தும் என்பதுதான் எங்கள் எண்ணம். மாநிலக் கட்சிகளின் உதவி தேவை என்று அவர்களே பலமுறை சொல்லி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.