கட்டுமான நிறுவன ஊழியருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


கட்டுமான நிறுவன ஊழியருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
x

கடன் அட்டை மூலம் பணம் மோசடி செய்த வழக்கில் கட்டுமான நிறுவன ஊழியருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வங்கி அதிகாரிகளுக்கு பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர்

கட்டுமான நிறுவன ஊழியர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 44). இவர் சென்னை திருவான்மியூரில் ஜெயராம் நகர் ஆசிரியர் காலனியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் ஊழியராக பணிபுரிந்தார். அப்போது அங்குள்ள வால்மீகி பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். அப்போது வங்கியின் கிரடிட் கார்டு பிரிவை சேர்ந்தவர் மோகன்குமாரை அணுகி அவருக்கு கடன் அட்டை (கிரடிட் கார்டு) பெற்றுத்தருவதாக அவரது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்றார்.

அதற்கான விண்ணப்பித்தல் செயல்பாடுகள் முடிவடைந்தவுடன் 15 நாட்களுக்குள் கடன் அட்டை மோகன்குமாரின் முகவரிக்கு வந்துவிடும் என்று வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால் பலமாதங்கள் ஆகியும் அவருக்கு கடன் அட்டை வரவில்லை.

ரூ.1¾ லட்சம் மோசடி

இதற்கிடையே மோகன்குமார் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு பெரம்பலூர் வந்துவிட்டார். சென்னையில் இருந்து வங்கியின் சேமிப்பு கணக்கையும் பெரம்பலூர் கிளைக்கு மாற்றம் செய்துவிட்டார். இந்தநிலையில் பெரம்பலூர் வங்கி கிளையில் மோகன்குமார் கடன்பெறுவதற்காக அணுகியபோது, அவருடைய பெயரில் உள்ள கடன்அட்டை மூலம் பரிவர்த்தனை செய்த வகையில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் நிலுவை இருப்பதாகவும், வங்கி கடன் பெறுவதற்கான சிபில் ஸ்கோரில் இந்த நிலுவை பாக்கி பட்டியலில் இடம்பெறுவதால், நிலுவையை திருப்பி செலுத்திவிட்டு வருமாறு வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்து மோகன்குமாருக்கு கடன் தரமறுத்து விட்டனர்.

ரூ.1¾ லட்சம் மோசடி நடைபெற்றதை அறிந்த மோகன்குமார் தான் கடன்அட்டை எதுவும் பெறவில்லை என்றும், அதன்பேரில் எவ்வித பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றும் தெரிவித்ததை வங்கி அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ரூ.1 லட்சம் இழப்பீடு

இதையடுத்து, சென்னையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிரடிட் கார்டு கிளை, போரூர் கிளை மேலாளர், புதுடெல்லியில் உள்ள கடன்அட்டைக்கான தொகையை திருப்ப செலுத்தும் சேவை வழங்கும் நிறுவனத்தின் மேலாளர், மும்பையில் உள்ள சிபில் ஸ்கோர் வழங்கும் நிறுவனம் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மோகன்குமார் தனது வக்கீல்கள் மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

இதில் மோகன்குமாரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தும், எதிர்மனுதாரர்கள் 4 பேரும் தங்களது சேவைகுறைபாடு காரணமாக மோகன்குமாருக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் இந்த வழக்கு தீர்ப்பு கூறப்பட்ட நாளில் இருந்து 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க தவறினால் ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டியுடன் வங்கி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தனர்.


Next Story