நடிகர் இளவரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - மன்னிப்பு கோரிய காவல்துறை


நடிகர் இளவரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - மன்னிப்பு கோரிய காவல்துறை
x

பாண்டிபஜார் காவல்நிலைய ஆய்வாளர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரில், சங்கத்தின் முன்னாள் ஊழியர்கள் நிதி முறைகேடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணையை முடிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த 2022 மார்ச் முதல் 2023 செப்டம்பர் வரை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த 5 பேர் இன்று நேரில் ஆஜராகி இருந்தனர். அப்போது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது உண்மைதான், ஆனால் வேண்டுமென்றே செய்யவில்லை எனவும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் காவல் ஆய்வாளர்கள் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 20-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.




Next Story