மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர் மருந்து வினியோகம், முதல்முறை சேவைகளில் 2½ கோடி பேர் பயன்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்


மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர் மருந்து வினியோகம், முதல்முறை சேவைகளில் 2½ கோடி பேர் பயன்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த திட்டத்தின்கீழ் 2 கோடியே 39 லட்சத்து 81 ஆயிரத்து 319 பேர் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

2-ம் ஆண்டு தொடக்கம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், கோதமேடு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக்குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருந்துபொருட்கள் அடங்கிய மருத்துவ பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மருந்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-

மக்களை தேடி மருத்துவம் திட்டம்

மக்களை தேடி மருத்துவம் திட்டமானது மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகளை 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் மற்றும் நடக்க இயலாதவர்களுக்கும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலமாக வழங்குதல், இல்லத்தில் வழங்கக்கூடிய நோய் ஆதரவு சிகிச்சை சேவைகளை நர்சு மூலம் வழங்குதல், இயன்முறை டாக்டர்களால் வழங்கப்படும் இயன்முறை மருத்துவ சிகிச்சை, சிறுநீரக நோயாளிகளை பராமரிக்க சுய 'டயாலிசிஸ்' செய்வதற்கான பைகளை வழங்கி, நோய் ஆதரவு சிகிச்சைகள் நர்சுகள் மூலமாக பராமரித்தல் போன்ற பிற பரிந்துரை சேவைகள் வழங்கப்படுகிறது.

எவ்வளவு பேர் பயன் பெற்றனர்?

இத்திட்டத்தில் முதல் முறை சேவைகளாக இதுவரை ரத்த அழுத்தம் கட்டுப்பாடு மருந்துகளை 33 லட்சத்து 3 ஆயிரத்து 774 பயனாளிகளும், நீரிழிவு கட்டுப்பாடு மருந்துகளை 23 லட்சத்து ஆயிரத்து 777 பயனாளிகளும், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு கட்டுப்பாடு 2 மருந்துகளையும் 16 லட்சத்து 82 ஆயிரத்து 144 பயனாளிகளும், நோய் ஆதரவு சேவைகளை 3 லட்சத்து 37 ஆயிரத்து 984 பயனாளிகளும், இயன்முறை மருத்துவ சேவைகளை 6 லட்சத்து 97 ஆயிரத்து 145 பயனாளிகளும் மற்றும் சி.ஏ.பி.டி. என்ற டயாலிசிஸ் சேவைகளை 900 பயனாளிகள் என மொத்தம் 83 லட்சத்து 23 ஆயிரத்து 724 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

அதேபோல், தொடர் மருந்து வினியோகம் மற்றும் சேவைகளாக மாதாந்திர மருந்துகள் தொடர்ந்து வழங்கப்பட்டவர்களில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்கு 62 லட்சத்து 94 ஆயிரத்து 518 பயனாளிகளும், நீரிழிவு கட்டுப்பாட்டிற்கு 45 லட்சத்து ஆயிரத்து 353 பயனாளிகளும், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு கட்டுப்பாட்டிற்கு 35 லட்சத்து 43 ஆயிரத்து 770 பயனாளிகளும், நோய்ஆதரவு சேவைகளில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 694 பயனாளிகளும், இயன்முறை மருத்துவசேவைகளில் 8 லட்சத்து 50 ஆயிரத்து 711 பயனாளிகளும் மற்றும் சி.ஏ.பி.டி. என்ற டயாலிசிஸ் சேவைகளில் 2 ஆயிரத்து 549 பயனாளிகள் என மொத்தம் 1 கோடியே 56 லட்சத்து 57 ஆயிரத்து 595 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story