கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் காமராஜ், இணை பொதுச்செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலவள வங்கி சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ராமசாமி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நகர கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தண்டபாணி, நிலவள வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை சாசனங்கள் மீது பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பதவிகளில் நேரடி நியமனத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 29 சதவீத பதவிகளை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.