கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

காய்ச்சல், சளி உள்ளிட்ட எந்த அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் தமிழகத்தில் 476 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகாத நிலையில், நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் கொரோனாவுக்கு உயிரிழந்தார். இதனால் கொரோனா பாதிப்பு மீண்டும் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு பொது மக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தடுப்பூசி செலுத்தாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதே போல், 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், கொரோனா தொற்றில் இருந்து நம்மை தடுத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று கூறினார். மேலும் காய்ச்சல், சளி உள்ளிட்ட எந்த அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என பொது மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story