திருத்தணியில் ஒன்றிய குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்


திருத்தணியில் ஒன்றிய குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்
x

திருத்தணியில் ஒன்றிய குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம் 12 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஒன்றிய குழு தலைவராக தங்கதனம், துணை தலைவராக ரவி பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒன்றிய குழு தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்திற்கு போதிய கவுன்சிலர்கள் பங்கேற்காததால் ஒவ்வொரு முறையும் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று, துணை தலைவர் ரவி, வேலஞ்சேரி கவுன்சிலர் கவிச்சந்திரன், மத்தூர் கவுன்சிலர் பூங்கொடி ஆகியோர் தவிர மீதமுள்ள 8 கவுன்சிலர்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின் கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்பாபு மற்றும் சந்தானம் ஆகியோரை சந்தித்து ஒன்றிய குழு தலைவர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் டெண்டர் குறித்து அதிகாரிகள், சேர்மன் எங்களுக்கு தெரிவிப்பதில்லை. ஒன்றிய பொதுநிதியில் இருந்து எங்கள் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தருவதில்லை என புகார் தெரிவித்தனர்.

மேலும் ஒன்றிய அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 5 பெண் கவுன்சிலர்கள் உள்பட 8 பேர் வாயில் கருப்பு ரிப்பன் கட்டி போராட்டம் செய்தனர். இதனால் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கவுன்சிலர்களின் இந்த திடீர் போராட்டத்தால் ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story