திருச்செந்தூரில் ஒன்றரை வயது குழந்தையை கடத்திய தம்பதி கோவையில் கைது


திருச்செந்தூரில் ஒன்றரை வயது குழந்தையை கடத்திய தம்பதி  கோவையில் கைது
x

திருச்செந்தூரில் கடந்த 6-ஆம் தேதி ஒன்றரை வயது குழந்தையை கடத்திய தம்பதியை கோவையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை,

கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அருகேயுள்ள மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரின் மனைவி ரதி. இவர்களுக்கு ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீஹரிஸ் (1½ வயது) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். முத்துராஜின் மனைவி ரதி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை போடுவதாக வேண்டி உள்ளார்.

தசரா திருவிழா விரைவில் தொடங்க உள்ள நிலையில், கணவன்-மனைவி இருவரும் குழந்தை ஸ்ரீஹரிசுடன் கடந்த மாதம் 28-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதற்காக வந்தனர். அங்கு கோவில் வளாகத்தில் தங்கி இருந்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் அவர்களுடன் நன்றாக பேசி பழகி உள்ளார். மேலும் அவர்களுடனேயே தங்கி இருந்தார்.

கடந்த 6 ஆம் தேதி காலையில் ரதி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் துணி துவைப்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தின் வடக்கு டோல்கேட் அருகே உள்ள சுகாதார வளாகத்துக்கு வந்தார். அவர்களுடன் அந்த பெண்ணும் வந்தார். அப்போது முத்துராஜ் சோப்பு வாங்கி வருவதாக கூறி கடைக்கு சென்றார். அதே நேரத்தில் ரதியுடன் கலகலவென்று பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண், திடீரென குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து விட்டு வருவதாக கூறி குழந்தையை தூக்கி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துராஜூம், அவரது மனைவி ரதியும் தங்களது குழந்தையை தீவிரமாக தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவர்களுக்கு அந்த பெண் தங்களுடன் நன்றாக பழகி நாடகமாடி குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரதி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை உடனடியாக ஆய்வு செய்தனர். அதில் குழந்தையை அந்த பெண் கடத்தி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மதுரை நோக்கி சென்ற பைக்கில் ஆண் ஒருவருடன் அந்தப் பெண் குழந்தையை கடத்தி சென்ற காட்சிகளும் பதிவாகின. அதை வைத்து போலீசார், குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், குழந்தையை கடத்திய பெண்ணை கோவை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட குழந்தை விரைவில் மீட்கப்படும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் ஆலந்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கும் திலகவதி - பாண்டியன் தம்பதி மீது ஏற்கனவே குழந்தை கடத்தல் வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.


Next Story