அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 24-வது முறையாக நீட்டிப்பு


அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 24-வது முறையாக நீட்டிப்பு
x
தினத்தந்தி 6 March 2024 1:52 PM IST (Updated: 6 March 2024 1:54 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 24-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, இந்த வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே, வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், வழக்கை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை 3 மாதங்களில் முடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக கூறி விசாரணையை 6-ந் தேதிக்கு (அதாவது இன்று) தள்ளிவைத்தார்.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தினமும் விசாரித்து 3 மாதத்தில் முடிக்க அவகாசம் அளித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுவை 11-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதனிடையே செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், வருகிற 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 24-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story