100 சதவீத தேர்ச்சி அளிக்க நெருக்கடி... மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் - ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்


100 சதவீத தேர்ச்சி அளிக்க நெருக்கடி... மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் - ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்
x

100 சதவீத தேர்ச்சி அளிக்க அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடியால், மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பெரம்பலூர்,

பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அளிக்க வேண்டும் என அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள், பள்ளிக் கல்வித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகளின்போது அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என உயர் அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களை காப்பியடிக்க அனுமதிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் முதலிடங்களை பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறையின் தற்போதைய ஆணையர் நந்தகுமார், பெரம்பலூர் ஆட்சியராக இருந்தபோதும், இதே போன்று நெருக்கடி கொடுத்து மாணவர்களை பார்த்து எழுத அனுமதித்ததாகவும், இந்த ஆண்டும் அப்படித்தான் நடக்கப் போகிறது என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த அறிக்கை, பள்ளிக்கல்வித்துறையில் புயலை ஏற்படுத்தியுள்ளது.


Next Story