தீபாவளி விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்


தீபாவளி விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2023 7:26 PM GMT (Updated: 13 Nov 2023 12:50 AM GMT)

கொடைக்கானலில் நிலவும் குளுமையான சூழலை அனுபவிக்க வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

சென்னை,

தீபாவளி பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் நேற்றைய தினம் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் அழகை ரசித்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதே போல் கொடைக்கானலில் மிதமான வெப்பத்துடன் கூடிய குளுமையான சூழல் நிலவியதால் அங்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

உலகப் பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவிலிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள சிற்பங்களை இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர் மேத்யூ நேரில் கண்டு ரசித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Next Story