திருச்சியில் இருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலா பஸ் இயக்கம் - வருகிற 8-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது

திருச்சியில் இருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலா பஸ் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வருகிற 8-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
திருச்சி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, சென்னையிலிருந்து திருப்பதிக்கு குளிர்சாதன வசதியுடன் சுற்றுலா சொகுசு பஸ்சை தினசரி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கி வருகிறது.
இந்த சுற்றுலா பஸ்சை தமிழகத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக திருச்சியிலிருந்து திருப்பதிக்கு குளிர்சாதன வசதியுடன் சுற்றுலா சொகுசு பஸ் தினசரி இயக்கப்படுகிறது. இந்த திட்டம் வருகிற 8-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும், இருவேளை சைவ உணவு மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் உள்பட கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.3,300-ம், சிறுவர்களுக்கு ரூ.3 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த சுற்றுலா சொகுசு பஸ்சில் பயணம் செய்ய 7 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இணையதளமான www.ttdconline.com-ல் சுற்றுலா பற்றிய விவரங்கள் மற்றும் முன்பதிவையும் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






