கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து 20,478 கனஅடி தண்ணீர் திறப்பு 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து 20,478 கனஅடி தண்ணீர் திறப்பு  5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 20,478 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 20,478 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மார்க்கண்டேயன் நதி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 42.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7,842 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்க 7,680 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையோரங்களில் பெய்த கனமழையால் மார்கண்டேயன் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வேப்பனப்பள்ளி மாரசந்திரம் தடுப்பணை நிறைந்து உபரிநீர் வெளியேறி தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

தடை நீடிப்பு

கெலவரப்பள்ளி அணை மற்றும் மார்கண்டேயன் நதியில் இருந்து வரும் தண்ணீர் ஒன்றாக கலந்து கிருஷ்ணகிரி அணைக்கு வருவதால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 17,288 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளதால் வெள்ள அபாய ஒலி எழுப்பப்பட்டு 8 மதகுகள் வழியாக வினாடிக்கு 20,478 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் அணையை சுற்றிபார்க்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


Next Story