சேதமடைந்த படகுகள், மீன்பிடி வலைகள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி


சேதமடைந்த படகுகள், மீன்பிடி வலைகள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி
x

மாமல்லபுரம் அடுத்த தேவனேரி மீனவர் குப்பத்தில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த படகுகள், மீன்பிடி வலைகள் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

செங்கல்பட்டு

அமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த தேவனேரி மீனவர் குப்பத்தில் 'மாண்டஸ்' புயல் கரையை கடந்த அன்று பலத்த காற்று வீசியதாலும், கடல் சீற்றத்தாலும் அங்குள்ள படகுகள், வலைகள் சேதமடைந்தன. 20 மீட்டர் அளவுள்ள சிமெண்டு சாலைகள் ராட்சத அலைகள் தாக்கியதில் சேதம் அடைந்தது. அந்த பகுதியில் 7 அடி உயரத்திற்கு கடல் அரிப்பும் ஏற்பட்டது. மின்கம்பங்களும் சேதம் அடைந்தன.

குடியிருப்புகளுக்கு செல்லும் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து புயலால் பாதிப்புக்குள்ளான தேவனேரி மீனவர் குப்பம் பகுதிக்கு நேற்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு சேதமடைந்த மீன்பிடி உபகரணங்களை பார்வையிட்டு, அதன் விவரங்களை மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

நிவாரண உதவிகள்

பின்னர் நிருபர்களுக்கு அளித்த போட்டியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தற்போது இங்கு சேதமடைந்த படகு, வலைகள் போன்றவற்றின் முழு விவரங்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் துல்லியமாக கணக்கெடுக்க செய்யப்படும். சேத விவரங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பாதிப்புக்கு உள்ளான அனைத்து மீனவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சருடன் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன்குமார் விசுவநாதன், தேவிராமு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அய்யப்பன், அன்பு உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

காசிமேடு

சென்னை காசிமேட்டில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த விசைப்படகுகளை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. எபினேசர், மீன்வளத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக காசிமேடு பல்லவன் நகர், சிங்காரவேலர் நகர் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் மீனவ மக்களுக்கு அரிசி, பால், ரொட்டி, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.


Next Story