திடக்கழிவு மேலாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை சென்னையில் செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவு - மேயர் பிரியா


திடக்கழிவு மேலாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை சென்னையில் செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவு - மேயர் பிரியா
x

திடக்கழிவு மேலாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை சென்னையில் செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை

திடக்கழிவு மேலாண்மையின் புதிய தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதற்காக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சங்கர் லால், தலைமை பொறியாளர் என்.மகேஷ் மற்றும் பொறியாளர்கள் குழு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 7 நாள் பயணமாக சென்றனர். அங்கு ஆய்வை முடித்துகொண்டு மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் குழு சென்னை திரும்பினர்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது:-

புதிய யுக்தி

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் திடக்கழிவு மேலாண்மை சவாலான விஷயமாக உள்ளது. முதல்-அமைச்சரின் கனவு திட்டமான சிங்கார சென்னையை உருவாக்குவதற்கு திடக்கழிவு மேலாண்மையின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மையை கையாளும் முறையை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்தோம். இத்தாலியில் திடக்கழிவுகளை பிரிக்க நாம் பின்பற்றும் முறையையே கையாளுகின்றனர். ஆனால் பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக ஒரு பிளான்ட் அமைத்து புதிய யுக்தியை கையாளுகின்றனர். இதுகுறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

முதல்-அமைச்சர் ஒப்புதல்

அதேபோல பிரான்சில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கின்றனர். சென்னையிலும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். புதிய தொழில்நுட்ப யுக்தியை குறிப்பு எடுத்துள்ளோம். சென்னை மாநகராட்சியில் இந்த புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் துறையின் அமைச்சருடன் கலந்து ஆலோசித்து இந்த புதிய திட்டங்கள் தொடர்பாக முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். அவரது ஒப்புதலுக்கு பிறகு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஆலோசனை

ஸ்பெயின் நாட்டில் குப்பைகளை சேகரிக்கும் போதே லாரிகளில் பிளாஸ்டிக் ஆர்கானிக் என பல வித குப்பைகள் பிரிக்கப்படுகிறது, அதுபோல சென்னை மாநகராட்சியிலும் செயல்படுத்த முடியுமா? என ஆலோசனை செய்ய உள்ளோம்.

குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் சென்னையில் இரண்டு பயோ சி.என்.ஜி. ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில் கோயம்பேடு மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் 4 புதிய பயோ சி.என்.ஜி. நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story