சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள் இணைக்க முடிவு


சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள் இணைக்க முடிவு
x

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள் இணைக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

சென்னை,

சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக இருப்பது மின்சார ரெயில் சேவை. குறைந்த கட்டணத்தில் விரைவான பயணத்தை கொடுப்பதால், அலுவலகம் செல்வோரின் முக்கிய தேர்வாக இது அமைந்துள்ளது.

அந்த வகையில், மின்சார ரெயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதிகாலை 3.45 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை இந்த ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர்மார்கெட்-அரக்கோணம், மூர்மார்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை ஆகிய வழித்தடங்களில் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

எனவே, இந்த ரெயில்களில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆகையால், மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ரெயில்வே துறைக்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்ற தெற்கு ரெயில்வே ஏ.சி. வசதியுடன் கூடிய ரெயில் பெட்டிகளை சோதனை அடிப்படையில் இணைக்க முடிவு செய்துள்ளது.

இதில் சென்னை கடற்கரை முதல் திருமால்பூர், சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை செல்லும் நீண்ட தூர ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து பயணிகளிடையே வரவேற்பு இருக்கின்றதா என சோதனை மேற்கொள்ளவுள்ளனர். இந்த சோதனையின் அடிப்படையில் அனைத்து ரெயில்களிலும் ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 முதல் 3 பெட்டிகள் வரை இணைக்கப்படவுள்ளன.

ஏற்கனவே மும்பை போன்ற பெரு நகரங்களில் ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரெயில்கள் இயங்கி வருகின்றன. இந்த ரெயில்களுக்கான பெட்டிகள் பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இங்குதான் சென்னை ரெயில்களுக்கு தேவையான ஏ.சி. பெட்டிகளும் தயாரிக்கப்படவுள்ளன.

1 More update

Next Story