"திருக்கோவிலூர் தொகுதியை காலி என அறிவியுங்கள்" - அ.தி.மு.க. மனு


திருக்கோவிலூர் தொகுதியை காலி என அறிவியுங்கள் - அ.தி.மு.க. மனு
x
தினத்தந்தி 1 March 2024 11:56 AM GMT (Updated: 1 March 2024 12:15 PM GMT)

பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியை காலியானதாக அறிவிக்கக்கோரி அ.தி.மு.க. மனு அளித்துள்ளது.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. சார்பில் திருக்கோவிலூர் தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் க.பொன்முடி. இவர், உயர் கல்வித்துறை அமைச்சராகவும் இருந்து வந்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவர் சிறை தண்டனை பெற்ற நிலையில், அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது. எம்.எல்.ஏ. பதவியை வகிக்கும் தகுதியையும் இழந்தார்.

இந்த நிலையில் திருக்கோவிலூர் தொகுதியின் நிலையையும் சபாநாயகர் அப்பாவு, தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால், அந்த தொகுதிக்கும் விளவங்கோடு தொகுதியுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. எனவே, தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் ஒரு தொகுதிக்கா? அல்லது இரு தொகுதிகளுக்கா? என்பது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக தெரிந்துவிடும்.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் பதவி பறிபோனதை அடுத்து திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியுள்ளனர். சட்டசபை செயலாளர் சீனிவாசனை சந்தித்து அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் சி.விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் மனு அளித்துள்ளனர்.

பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டு இரண்டரை மாதங்களாகியும், சபாநாயகர் திருக்கோவிலூர் சட்டசபைத் தொகுதி காலியாக இருப்பதாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. மாற்று கட்சியினருக்கு ஒரு நீதி, தனது கட்சினருக்கு ஒரு நீதி என்றில்லாமல் அனைவருக்கும் ஒரே நீதி என்பதை நிரூபிக்கும் வகையில் பேரவைத் தலைவர் நடந்து கொள்ள வேண்டும் என அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story