ஸ்ரீபெரும்புதூரில் பதுக்கி வைத்திருந்த மான் கொம்பு பறிமுதல்


ஸ்ரீபெரும்புதூரில் பதுக்கி வைத்திருந்த மான் கொம்பு பறிமுதல்
x

ஸ்ரீபெரும்புதூரில் பதுக்கி வைத்திருந்த மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கடந்த மார்ச் மாதம் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்ப்புரம் ஊராட்சி மன்ற தலைவரும் பா.ஜ.க. பட்டியலின மாநில பொருளாளருமான பி.பி.ஜி.டி சங்கர் கடந்த மாதம் 27-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இதனால் ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவானது.

தொடர்ந்து 2 கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியதால் மீண்டும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்ராண்டு சந்திரதாஸ் மேற்பார்வையில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் முழுவதையும் சுற்றி ரோந்துப்பணியில் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தியும் பல இடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் திட்டம் திட்டி குற்ற சம்பவங்களில் ஈடுபட இருந்த 20 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்ட போது 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் வி.ஆர்.பி. சத்திரம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த தீனா என்கிற தினகரன் (20) என்பது தெரியவந்தது. அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் ரவுடிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு்ள்ள விக்னேஷ் வீட்டில் மான் கொம்புகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் விக்னேஷ் வீட்டில் சோதனை நடத்தி மான் கொம்பை கைப்பற்றினர். 18 வயது சிறுவன் மற்றும் தினகரனை கைது செய்தனர்.


Next Story