சுவர்களுக்கிடையே சிக்கி கொண்ட மான் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு


சுவர்களுக்கிடையே சிக்கி கொண்ட மான் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு
x

சுவர்களுக்கிடையே சிக்கி கொண்ட மான் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.

சென்னை

மாமல்லபுரம் அடுத்த எச்சூர் காட்டில் இருந்து வழி தவறி வந்த புள்ளி மான் ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள பா.ஜ.க. மாமல்லபுரம் நகர தலைவர் தணிகைமணி என்பவரது மாந்தோப்பில் புகுந்துவிட்டது. அந்த புள்ளி மான், மாந்தோப்பில் உள்ள பம்பு செட் அறை சுவர் மற்றும் சுற்றுச்சுவருக்கிடையில் சிக்கி வெளியே வர முடியாமல் கத்தி கொண்டிருந்தது. சத்தம் கேட்டு அங்கு வந்த தணிகைமணி, மாந்தோப்பு பணியாளர்கள் உதவியுடன் மானை மீட்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

உடனடியாக மாமல்லபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த தீயணைப்பு துறையினர், மாமல்லபுரம் பூஞ்சேரி சிற்பிகள் சிலரை வரவழைத்து அவர்களின் உதவியுடன் 4 அடி அகலத்தில் சுவரை உடைத்து 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு புள்ளி மானை உயிருடன் மீட்டனர். இதில் மானின் உடலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து திருப்போரூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து காயத்துடன் மீட்கப்பட்ட மானை மீட்டு அதற்கு சிகிச்சை அளித்தனர். மான் குணமடைந்த பிறகு திருப்போரூர் காட்டில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


Next Story