எடப்பாடி பழனிசாமி ,அண்ணாமலை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு


எடப்பாடி பழனிசாமி ,அண்ணாமலை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு
x

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவர் மீதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாபர் சாதிக் கைது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். இதே போல இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.

இதையடுத்து , எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவர் மீதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் சார்பில் வக்கீல் தேவராஜன் சென்னை மாநகர குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க முதல்-அமைச்சர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதைப்பொருள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் முதல்-அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இருவரும் பேசியுள்ளனர். எனவே அவர்கள் மீது கிரிமினல் மற்றும் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story