தமிழ்நாட்டில் அபராதம் கட்டும் அளவுக்கு மருத்துவ கல்லூரிகளில் குறைபாடு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


தமிழ்நாட்டில் அபராதம் கட்டும் அளவுக்கு மருத்துவ கல்லூரிகளில் குறைபாடு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x

மருத்துவ கல்லூரிகளை பராமரிக்கக்கூட முடியாத அளவுக்கு தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவக் கல்லூரிகள்தான் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அதிக அளவில் துவக்கப்படவில்லை. துவங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் குறைபாடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளக்கூட தி.மு.க. அரசால் முடியவில்லை. 2023 ஆம் ஆண்டு, பயோமெட்ரிக் வருகை இல்லாதது, புகைப்படக் கருவிகள் சரியாக இயங்காதது போன்ற காரணங்களினால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் அளவுக்கு நிலைமை இருந்தது.

இந்தக் குறைபாடுகள் இந்த ஆண்டிலும் தொடர்கின்றன. செயலற்ற ஆட்சி என்பதற்கு இதைவிட ஓர் எடுத்துக்காட்டு தேவையில்லை. மருத்துவக் கல்லூரிகளை பராமரிக்கக்கூட முடியாத திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கும் செயல் ஆகும்.

கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், அரசு ஊழியர்கள் பற்றாக்குறை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப உதவியாளர்கள் பற்றாக்குறை என்று அனைவரும் கூறி வந்ததை நிரூபிக்கும் வகையில், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தர்மபுரி, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளுக்கு மூன்று இலட்சம் ரூபாய் அபராதத்தை தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 75 விழுக்காட்டிற்கும் குறைவாக மருத்துவப் பேராசிரியர்கள் இல்லை என்றால் விளக்கம் கேட்டு அறிவிப்புகள் பெறப்படும் என்றும், இதன் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும், தேர்வுப் பணி, ஆய்வுப் பணி போன்ற காரணங்களால் பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டில் மருத்துவப் பேராசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், அதனை தேசிய மருத்துவ ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறி இருக்கிறார்.

அதே சமயத்தில், இதுபோன்ற அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளுக்கு இரண்டு முறை விளக்கம் கேட்டு அறிவிப்புகள் அனுப்பப்படும் என்றும், விளக்கங்கள் திருப்தி அளிக்காதபட்சத்தில், கல்லூரி நிர்வாகத்தினருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதற்கு பின்பே அபராதம் விதிக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்வி வாரியத் தலைவர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரின் கூற்றையும், தேசிய மருத்துவ ஆணைய அதிகாரியின் கூற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முறையான, நியாயமான விளக்கம் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை என்பதும், போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. இதன் விளைவாக மருத்துவ மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், இனி வருங்காலங்களில், அங்கீகாரம் ரத்தாகும் நிலை, அபராதம் விதிக்கும் நிலை போன்றவற்றிற்கு மருத்துவக் கல்லூரிகள் தள்ளப்படாது இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story