தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புஅனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்டத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள், கூட்டமைப்பு நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, பாஸ்கரன், புகழேந்தி, கேசவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்த 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஆகியவற்றில் பணிபுரிந்தவர்கள், ஊராட்சிகள், வனத்துறை மற்றும் வருவாய்த்துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்சம் ரூ.7,850 ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செலவு தொகை வழங்காமல் உள்ள அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை மனுக்களின் நிலவரத்தை தெரிந்து கொள்ள டிராக்கிங் சிஸ்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.