மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துதர்மபுரியில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்முறைகளை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மலைவாழ் மக்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் மல்லையன், மாவட்ட தலைவர் அம்புரோஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகி மாதையன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சிலம்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட நிர்வாகி சிசுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
நடவடிக்கை
கடந்த மே மாதம் தொடங்கி 80 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன குழுக்களுக்கு இடையே நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். மலைவாழ் பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். மணிப்பூரில் மதரீதியாக நடத்தப்படும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மலைவாழ் மக்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.