சுங்க சாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
சுங்க கட்டண உயர்வை கண்டித்து சுங்க சாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்திவேலூர்
சுங்க கட்டண உயர்வு
தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சுங்கக்கட்டணம் ரூ.10 முதல் ரூ.60 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள எம்.ராசாம்பாளையம் சுங்க சாவடியை லாரி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் நலிவடைந்து வரும் லாரி தொழிலை காப்பாற்ற வேண்டும். சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள், சுங்க கட்டண உயர்வை குறைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டமாக ஆடு, மாடுகளுடன் சுங்க சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில பொருளாளர் தாமோதரன், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராஜாமணி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராஜசேகர், நாமக்கல் டிரைலர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னசாமி, விடுதலைகளம் கட்சி நிறுவன தலைவர் நாகராஜன், பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் பெரியசாமி, விவசாயிகள் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.