தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மண்டல துணைத்தலைவர் பூபேஸ்குப்தா தலைமை தாங்கினார். மண்டல பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்ட பொது செயலாளர் மணி நிர்வாகிகள் ரவி, சாமிநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்த பலன் மற்றும் 7 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்தமுறை மற்றும் ஓய்வு பெற்ற டிரைவர்கள், கண்டக்டர்களை மீண்டும் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பும்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த தகுதி உள்ளவர்களுக்கும் முன்னுரிமை உள்ள வாரிசுதாரர்களுக்கும் பணி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்தத்தில் உள்ளபடி அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்கப்பட வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






