சென்னை மாநகராட்சியில் தூர்வாரும் பணிகள் தொடக்கம் - 15 மண்டலங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் ஒதுக்கீடு


Desilting Works in Chennai Corporation
x

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கால்வாய்கள் நீர்நிலைகள் மற்றும் மழை நீர்வடிகால்களை தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னை,

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக சென்னையில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதன்படி தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நோக்கில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கால்வாய்கள் நீர்நிலைகள் மற்றும் மழை நீர்வடிகால்களை தூர்வாரும் பணிகள், ஆகாயத்தாமரையை அகற்றி தயார்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி துவங்கியுள்ளது.

இதற்காக 15 மண்டலங்களுக்கும் தலா 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளி நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டேரி நல்லான், விருகம்பாக்கம் கால்வாய், மாம்பலம் கால்வாய், ராஜ் பவன் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், அடையாறு மற்றும் கூவம் ஆறுகளிலும் ஆகாயத்தாமரை அகற்றி தூர்வரும் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற உள்ளன.

முதல் கட்டமாக ஜூன் 30-ந்தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும், தென்மேற்கு பருவ மழைக்குப் பிறகு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக மீண்டும் தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டு அக்டோபருக்குள் முடிக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.




Next Story