விவசாய நிலங்களை அழித்துவிட்டு தொழிற்பேட்டை அமைப்பதா? வானதி சீனிவாசன் கண்டனம்


விவசாய நிலங்களை அழித்துவிட்டு தொழிற்பேட்டை அமைப்பதா? வானதி சீனிவாசன் கண்டனம்
x

விவசாய நிலங்களை அழித்துவிட்டு தொழிற்பேட்டை அமைப்பதா? என்று வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொழிற்பேட்டை

பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்காக, நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்தபோதெல்லாம், அதனை தி.மு.க. மிக கடுமையாக எதிர்த்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், எந்த காரணத்தை முன்னிட்டும் விவசாய நிலங்களை கையகப்படுத்தமாட்டோம், தரிசு நிலங்களை கூட விவசாய நிலங்களாக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். அதனை நம்பி மக்களும் வாக்களித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு நேர் எதிராக, எதற்கெடுத்தாலும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள்.

சென்னை-சேலம் 8 வழி விரைவுச்சாலை திட்டத்தை முடக்கியவர்கள், இப்போது, அதிகாரம் கைக்கு வந்ததும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ள சிறுமுகையில், தொழிற்பேட்டை அமைப்பதற்காக சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதவிர, பவானிசாகர் அணைக்கு அருகில் 1,084 ஏக்கரில் தொழிற்பேட்டையும் அமைக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாக்குறுதிக்கு எதிராக...

ஏற்கனவே, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டையால் நிலத்தடி நீர் மாசடைந்து அப்பகுதி முழுவதுமே விவசாயம் பெருமளவு அழிந்துவிட்டது. இதனால், சிறுமுகை மற்றும் கீழ்பவானி பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

எனவே விவசாய நிலங்களை அழித்துவிட்டு தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை தி.மு.க. அரசு கைவிடவேண்டும். கொடுத்த வாக்குறுதிக்கு நேர் எதிராக செயல்படுவதுதான் திராவிட மாடல் ஆட்சி போலும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story