கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை சம்பவம்: சிபிஐ விசாரணை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை சம்பவம்: சிபிஐ விசாரணை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 July 2023 6:11 AM GMT (Updated: 7 July 2023 6:37 AM GMT)

கோவை சரக காவல்துறை டிஐஜி தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்டுள்ளது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியவில்லை.

இந்நிலையில் இவரது தற்கொலை குறித்து தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

கோவை சரக காவல்துறை டிஐஜி திரு.விஜயக்குமார் IPS அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய திரு.விஜயக்குமார் அவர்களின் பணி போற்றத்தக்கது. அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த திரு.விஜயக்குமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது,

ஆகவே திரு.விஜயகுமார் IPS அவர்களின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story