தி.மு.க. குறித்து அவதூறு பரப்பிய வாலிபர் கைது

தி.மு.க. குறித்து அவதூறு பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கைகாட்டி பகுதியில் தமிழக அரசின் சார்பில் நாளைமறுநாள் (புதன்கிழமை) நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்த நிலையில் உலகங்காத்தான் பகுதியில் உள்ள பாலத்தின் சுவற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரையப்பட்ட விளம்பரத்தை அக்கட்சியின் மாவட்ட செயலாளரிடம், அனுமதி பெற்று அழித்துவிட்டு அங்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் வகையில் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க.மாவட்ட தொண்டர் அணி துணை செயலாளர் தினேஷ்குமார் என்பவர் மாயக்கண்ணன், கொளஞ்சி ஆகியோரை கொண்டு விளம்பரம் எழுதி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மண்ணாங்கட்டி மகன் செந்தில்குமார் (35) என்பவர் நீங்கள் எப்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விளம்பரத்தை அழித்துவிட்டு தி.மு.க.விளம்பரம் எழுதலாம் என கூறி கத்தியை காட்டி மாயக்கண்ணன், கொளஞ்சி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனது செல்போன் வாட்ஸ்-அப் மூலம் தி.மு.க. குறித்து அவதூறு பரப்பியதாகவும் தெரிகிறது. இது குறித்து தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர்.






