தி.மு.க. கவுன்சிலர் தந்தை கொலை வழக்கு: போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய அண்ணன்-தம்பிக்கு கால் முறிந்தது


தி.மு.க. கவுன்சிலர் தந்தை கொலை வழக்கு: போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய அண்ணன்-தம்பிக்கு கால் முறிந்தது
x

கொலை செய்யப்பட்ட தி.மு.க. கவுன்சிலரின் தந்தை நாகராஜன்

தி.மு.க. கவுன்சிலரின் தந்தை மிளகாய் பொடி தூவி ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 58). இவர், திண்டுக்கல் சோலைஹால் மீன் மார்க்கெட்டில் மீன் கடை நடத்தி வந்தார். இவருடைய மகன் சிவக்குமார். இவர் திண்டுக்கல் மாநகராட்சியின் 25-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆவார்.

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி பேகம்பூர் மக்கான்தெரு பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற நாகராஜன் படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், நாகராஜன் மீது மிளகாய் பொடியை தூவி ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த திருப்பூர் பாண்டி, அவருடைய மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதில் கவுன்சிலர் சிவக்குமார் உள்பட 18 பேர் மீது வழக்கு உள்ளது. எனவே திருப்பூர் பாண்டி-பஞ்சவர்ணம் கொலைக்கு பழிதீர்க்க அவருடைய மகன்களான அசோக் (32), சந்திரசேகர் (30) ஆகியோர் நண்பர்களுடன் சேர்ந்து நாகராஜனை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அசோக், சந்திரசேகர், மூர்த்தி, சையது ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இதில் அசோக், சந்திரசேகர் ஆகியோர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்ததில் 2 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து 2 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு காலில் மாவுக்கட்டு போடப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நாகராஜன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story