விருத்தாசலத்தில்தி.மு.க. கவுன்சிலரின் கணவர், மகனை தாக்கிய 2 வாலிபர்கள் கைது


விருத்தாசலத்தில்தி.மு.க. கவுன்சிலரின் கணவர், மகனை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 20 March 2023 12:15 AM IST (Updated: 20 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் தி.மு.க. கவுன்சிலரின் கணவர், மகன் மீது தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் புதுப்பேட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி உஷா. இவர் விருத்தாசலம் நகராட்சியில் 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் ஆகாஷ் (வயது 20). இவர் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஆகாஷ் தனது கல்லூரி வளாகம் பின்புறம் கலையரங்கம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் நாச்சியார் பேட்டை பகுதியை சேர்ந்த 2 பேர் மது அருந்தி விட்டு அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசிக் கொண்டிருந்தனர்.

2 வாலிபர்கள் கைது

இதை பார்த்த ஆகாஷ், ஏன் இங்கு மது குடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆகாஷை அடித்து தாக்கியுள்ளனர். இது குறித்து ஆகாஷ் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவரது தந்தை பாலு அங்கு வந்தார். அப்போது அவரையும் தாக்கினர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் கல்லூரி நிர்வாகத்தினர் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து, 2 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்று, தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் நாச்சியார் பேட்டை நடுத்தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் சதீஷ்குமார் (22), மற்றும் பூமாலை மகன் அருள்குமார் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் விருத்தாசலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story