நெஞ்சுவலியால் பலி என கூறப்பட்ட முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை செய்யப்பட்டது அம்பலம்; உறவினர் உள்பட 5 பேர் கைது


நெஞ்சுவலியால் பலி என கூறப்பட்ட முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை செய்யப்பட்டது அம்பலம்; உறவினர் உள்பட 5 பேர் கைது
x

நெஞ்சுவலியால் இறந்ததாக கூறப்பட்ட முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இதில் அவரது உறவினர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் எம்.பி. சாவு

நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் எம்.பி. மஸ்தான் (வயது 66) ஆவார். சென்னை சேப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த இவர், 1995-2001 கால கட்டத்தில் அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து விட்டு, பின்னர் அந்தக் கட்சியில் இருந்து விலகினார். தி.மு.க.வில் சேர்ந்து, அதன். சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளராகவும, தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராகவும் இருந்தார்.

இந்த நிலையில் இவர் கடந்த 22-ந்தேதி சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். சென்னை கதிர்வேடு பகுதியை சேர்ந்த அவரது தம்பி மருமகன் இம்ரான் பாஷா(26) காரை ஓட்டிச் சென்றார்.

அந்தக் கார் செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி கடந்து செல்லும்போது, திடீரென மஸ்தானுக்கு வலிப்பு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், உடனே அவரை இம்ரான் பாஷா கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அங்கு டாக்டர்கள் மஸ்தானை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இயற்கை மரணம் அல்ல...

இதனையடுத்து மஸ்தான் உடலை சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிரேத பரிசோதனையில் மஸ்தான் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

உடனே, மஸ்தானின் மகன் ஹரிஸ் ஷாநவாஸ் தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மூக்கில் காயமும், அவர் அணிந்திருந்த வேட்டி, சட்டையில் ரத்தக்கறை இருந்ததாகவும் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.

இதனால் மஸ்தானுக்கு இயற்கையாக மரணம் நிகழவில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் விசாரணையில் களம் இறங்கினர்.

காரை ஓட்டிச்சென்றவர் மீது வலுத்தது சந்தேகம்...

முதலில் சம்பவத்தன்று மஸ்தானின் காரை ஓட்டிச் சென்ற அவரது உறவினர் இம்ரான் பாஷாவிடம் நடந்த சம்பவங்கள் பற்றி போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனால் போலீசாரின் சந்தேகப்பார்வை இம்ரான் பாஷாவின் மீது விழுந்தது. அவர்கள், அவரது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

மேலும், சம்பவத்தன்று மஸ்தானின் கார் சுங்கச்சாவடியை கடக்கும்போது காரில் மஸ்தான், அவருடைய கார் டிரைவர் தவிர மேலும் 2 பேர் இருந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் மஸ்தானின் காரை மற்றொரு காரும் பின் தொடர்ந்து வந்ததும் அந்த காரில் இருந்த ஒரு நபர் இறங்கி மஸ்தான் காரில் இருந்த நபர்களிடம் பேசியதும் பதிவாகி இருந்தது.

இதனால் இம்ரான் பாஷாவின் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதைத் தொடர்ந்து இம்ரான் பாஷாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில் அவர் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

திடுக்கிடும் வாக்குமூலம்

நான் டாக்டர். மஸ்தானின் நெருங்கிய உறவினர் என்பதால் அவரிடம் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். அவர் தி.மு.க.வில் பொறுப்பில் இருந்ததாலும் ஆஸ்பத்திரி நடத்தி வந்ததாலும், அவர் மூலம் எனக்கும் ஏதாவது பதவி கிடைக்கும் என்று அவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்தேன். நெருங்கிய உறவினர் என்பதால் என்னுடன் மஸ்தான் நெருங்கிப் பழகியும் வந்தார்.

இதனை நான் பயன்படுத்தி அவரிடம் அவ்வப்போது எனக்கு தேவைப்படும்போது சிறுகச்சிறுக பணம் கேட்டு பெறுவது வழக்கம். அப்படி நான் வாங்கிய பணம் மொத்தம் ரூ.15 லட்சம் ஆகிவிட்டது. இந்த நிலையில் மஸ்தானின் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த காரணத்தினால் மஸ்தான் என்னிடம் நான் வாங்கிய கடன் ரூ.15 லட்சத்தை திருப்பிக் கேட்டு எனக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார்.

கொலை செய்ய முடிவு

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சமயத்தில், எனது சித்தி மகன் குரோம்பேட்டையை சேர்ந்த தமீம் என்ற சுல்தானிடம் (34), மஸ்தான் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக தெரிவித்தேன். இதனையடுத்து நான் சுல்தான் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, பணம் கேட்டு தொந்தரவு செய்யும் மஸ்தானை கொலை செய்வதென முடிவு செய்து அதற்கான திட்டம் தீட்டினோம்,

மஸ்தானை கொலை செய்வதற்காக சுல்தான் மற்றும் அவரது நண்பர்களுக்கு ரூ.1 லட்சம் முன்பணமாக கொடுத்தேன். மஸ்தான் டாக்டர் என்பதால் அவரை கத்தி, இரும்புகம்பி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என நினைத்து, மூக்கை மட்டும் அழுத்தி மூச்சு திணற வைத்து கொலை செய்வதென திட்டம் தீட்டினோம்.

'கொலை செய்தோம்...'

அதை செயல்படுத்துவதற்காக சம்பவத்தன்று மஸ்தானிடம், " உங்களிடம் வாங்கிய ரூ.15 லட்சத்தை தந்து விடுகிறேன், பணத்தை எனக்கு தெரிந்தவரிடம் செங்கல்பட்டு அருகே சென்று வாங்க வேண்டும்" என்று கூறி மஸ்தானை காரில் அழைத்து சென்றேன். கார் குரோம்பேட்டை அருகே செல்லும்போது என்னுடைய உறவினர் தமீம் என்கிற சுல்தான் மற்றும் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த நசீர்(38) ஆகியோர் வழியில் ஏறிக்கொண்டனர். எங்களுடைய காருக்குப் பின்னால் நண்பர்கள் பம்மலை சேர்ந்த தவுபிக் அகமது (31) மற்றும் குரோம்பேட்டையை சேர்ந்த லோகேஸ்வரன்(21) ஆகியோர் எங்களைப்பின் தொடர்ந்து வந்தனர். கார் பரனூர் சுங்கச்சாவடியைத் தாண்டி சென்றபோது காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரின் பின் சீட்டில் அமர்ந்து இருந்த நசீர், மஸ்தானின் கைகளை பின்புறமாக இழுத்து பிடித்துக் கொண்டார். உடனே சுல்தான் அவரது வாய் மற்றும் மூக்கை அழுத்திப் பிடித்து மூச்சு திணறல் ஏற்படுத்தி மஸ்தானை கொலை செய்தோம்.

'போலீசிடம் நாடகமாடினேன்....'

மஸ்தான் இறந்துவிட்டதை உறுதி செய்த பின் என்னுடன் பின்னால் காரில் வந்த தவுபிக் அகமது, லோகேஸ்வரன், ஆகியோர் வந்த காரில் சுல்தான், நசீர் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்து விட்டு மஸ்தான் வலிப்பு மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து விட்டதாக போலீசாரிடம் நாடகமாடினேன்.

இவ்வாறு இம்ரான் பாஷா வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது

இதனையடுத்து முன்னாள் எம்.பி., மஸ்தானை கொலை செய்த வழக்கில் அவரது உறவினர் இம்ரான் பாஷா, தமீம், நசீர், தவுபிக் அகமது, லோகேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மஸ்தானை கொலை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களைக் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 5 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story