மின் பற்றாக்குறை அச்சுறுத்தலை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்..! - ஒ.பன்னீர் செல்வம்


மின் பற்றாக்குறை அச்சுறுத்தலை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்..! - ஒ.பன்னீர் செல்வம்
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் ஏற்பட உள்ள மின் பற்றாக்குறை அச்சுறுத்தலை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் ஏற்பட உள்ள மின் பற்றாக்குறை அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துமாறு திமுக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், இளைய சமுதாயத்தினர் முன்னேற்றம் அடைவதற்கும் முக்கிய காரணியாக விளங்குவது மாறி வரும் இன்றைய நவீன வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் மின்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மின்சாரத்தின் தேவை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்வதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஆங்காங்கே மின் தடை அல்லது மின் வெட்டு ஏற்பட்டு வருகின்ற நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மின்சாரத்தை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 13 மின் பகிர்மானக் கழகங்கள் மின்சாரத்தை வாங்க அல்லது விற்பதற்கான எரிசக்தி பரிமாற்றச் சந்தையில் (Power Exchange Market) பங்கேற்க மத்திய அரசின் நிறுவனமான Power System Operation Corporation Limited தடை விதித்துள்ளது என்றும், இதற்குக் காரணம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவை இணைந்து 17-08-2022 வரை 926 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்தாததுதான் என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இது அரசினுடைய நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு எடுத்துகாட்டு. கடும் கண்டனத்திற்குரியது. இதன்படி பார்த்தால், தற்போதுள்ள சூழ்நிலையில், மின்சாரத் தேவை அதிகரித்தால், கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தை எரிசக்தி பரிமாற்றச் சந்தையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் வாங்க இயலாது. அதாவது, மின்சாரத்தின் தேவை அதிகரித்தால் மின் தடை ஏற்படக்கூடிய அபாயகரமான நிலைமை தமிழ்நாட்டிற்கு ஏற்படும்.

இது குறித்து கருத்து தெரிவித்த மின்சாரத் துறை அதிகாரிகள், மின்சாரத்தின் தேவை தற்போது குறைந்து இருப்பதாகவும், காற்றாலை மூலம் தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மின்சாரம் கிடைத்து வருவதாகவும், நிலுவைத் தொகையான 926 கோடி ரூபாயை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், எனவே இதுகுறித்து பதற்றம் அடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், மாண்புமிகு அமைச்சரோ 70 கோடி ரூபாய் தான் நிலுவைத் தொகை என்கிறார்!

இருப்பினும், காற்றாலை மின்சாரம் என்பது முற்றிலும் வானிலையை, குறிப்பாக காற்றின் வேகத்தை பொறுத்து கிடைக்கக்கூடியது. கடந்த சில நாட்களாக காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் குறைந்து கொண்டே வருவதாகவும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றாலை மூலம் 28.11 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்ட நிலையில், மின்சாரத் தேவை என்பது 350 மில்லியன் யூனிட் என்ற அளவில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

மின்சாரத் தேவை என்பது எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம் என்ற நிலையில், ஒரு நாட்டின் பொருளாதாரமே மின்சாரத்தை நம்பியுள்ள நிலையில், எரிசக்தி பரிமாற்றச் சந்தையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு.

எனவே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, மின் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயத்தை போக்கவும், வருங்காலங்களில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story