'அவசரகதியில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது தி.மு.க. அரசு' - அண்ணாமலை விமர்சனம்
தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை,
புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக மாணவர்களுக்குக் கொண்டு செல்வதற்காக, பா.ஜ.க. சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் ஒவ்வொரு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே பா.ஜ.க. கொண்டிருக்கும் விருப்பம். அதன்படி, உலகத் தரத்திலான, தொலை நோக்குச் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் முழு பலன்களும் தமிழக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப் பாடத்திட்டங்களை எதிர்ப்பதுபோல நாடகமாடிவிட்டு, படிப்படியாக மத்திய அரசின் சிபிஎஸ்இ பரிந்துரைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி வரும் தி.மு.க. அரசுக்கு, பா.ஜ.க. சார்பாக நன்றி கூறியிருந்தோம். எங்கே தங்கள் வேஷம் கலைந்து மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பதட்டத்தில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியாக தி.மு.க. ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
சமீப காலமாக, தி.மு.க. கட்சியின் பெயரில் வெளிவர வேண்டிய அறிக்கைகள் எல்லாம் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பெயரில் வெளிவருவதில் பெரிய ஆச்சரியமில்லை. இன்னும் சில நாட்களில், தி.மு.க. கட்சி உள்விவகாரங்களான, பிரியாணி கடையில் தகராறு செய்த தி.மு.க. நிர்வாகி, கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் போன்ற தகவல்கள் கூட, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியே மக்களுக்கு அறிவிக்கப்படலாம். தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல.
அறிக்கையில் பல பிழைகள் இருப்பதைக் கூடக் கவனிக்காமல் அவசரகதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்றுதான் தெரியவில்லை. செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து 2018 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டிற்கான தேசியக் கல்விக் கொள்கை மாதிரி வடிவத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை வெளியிடப்பட்டது 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான். தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்பாக தமிழகத்தில் இதற்கான கொள்கை உருவாக்கினோம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பொய் என்பது இதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. தங்கள் அறிக்கையில் மாதத்தைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டால் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்து விட்டீர்களா?
கேள்விக்கு நேரடி பதில் சொல்ல முடியவில்லை என்றால், பழம்பெருமை பேசுவது தி.மு.க.வுக்கு வழக்கம். பெரியார் கிண்டி பொறியியல் கல்லூரிக்குச் சென்ற 1970-ம் ஆண்டு என்பதற்குப் பதிலாக 1920-ம் ஆண்டு என்று மற்றொரு பிழை அறிக்கையில் இருக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரிக்கு ஐ.பி.எம். 1620 கணிப்பொறி வாங்கப்பட்ட ஆண்டு 1963. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1970-ம் ஆண்டு, பெரியார் செல்லும்வரை, அந்தக் கணிப்பொறி புதியதாக இருந்து என்று தி.மு.க. கூறுகிறதா? பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17, 1879 அன்று புதன்கிழமை ஆகும். அவர் பிறந்த நாள் சனிக்கிழமை என்று கணிப்பொறி கூறியதாக மற்றுமொரு பிழை அறிக்கையில் இருக்கிறது.
1967-ம் ஆண்டு, அன்றைய பம்பாயிலும், பின்னர் 1990களின் பிற்பகுதியில், பெங்களூர், சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடையத் தொடங்கின. திறமை வாய்ந்த தமிழக இளைஞர்கள் மூலம், தமிழகம் இந்தத் துறையில் முன்னேறி வருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் என்றால் என்னவென்றே தெரியாது என்ற ரீதியில் தி.மு.க. அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது.
இனியாவது நிர்ப்பந்தங்களுக்குப் பயந்து அவசரகதியில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட வேண்டாம் என்று தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்வதோடு, புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக மாணவர்களுக்குக் கொண்டு செல்வதற்காக, பா.ஜ.க. சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றிகளை கூறிக் கொள்கிறேன்."
இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.