ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்


ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்
x

ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீசெல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில்,

கிராம ஊராட்சிகளின் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்தல், கூட்டத்திற்கான அழைப்பிதழை அளித்தல், ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் வருகைப் பதிவேட்டினை பராமரித்தல், முந்தைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரித்தல், கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளை பதிவு செய்தல் என பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொள்பவர்கள் ஊராட்சி செயலாளர்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், கிராமத்தின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஊராட்சி செயலாளர்கள். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த ஊராட்சி செயலாளர்களை பணியில் அமர்த்தும் அதிகாரமும், பணியிலிருந்து நீக்கும் அதிகரமும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வசம் இருந்த நிலையில், பணியாளர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களால் பணிநீக்கம் செய்யப்படுவது என்பது வாடிக்கையாக இருந்தது.

இதனை எதிர்த்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஊராட்சி செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் தடையாணை பெற்றதோடு, இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி மன்றம் மூலம் நியமனம் செய்யக்கூடாது என்ற வகையில், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஊராட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டுமென ஆறாவது மாநில நிதி ஆணையமும் பரிந்துரைத்து உள்ளதாகவும், ஆனால் பணிவிதிகள் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு இன்னும் வெளியிடவில்லை என்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், ஏழை, எளிய திறமையான இளைஞர்கள் அரசு வேலைக்கு வரும் வாய்ப்பு உருவாகும் என்றும், சமூக நீதி நிலை நாட்டப்படும் என்றும், இதன்மூலம் கட்சி வித்தியாசமின்றி ஊராட்சி செயலாளர்கள் செயல்படக்கூடிய நிலைமை உருவாகும் என்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, பனகல் மாளிகை முன்பாக ஆயிரக்கணக்கான ஊராட்சி செயலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளர்கள் பணிவிதிகள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட வேண்டும்; காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுடைய பணிவிதிகள் குறித்த அரசாணையை உடனடியாக வெளியிடவும், காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பவும், தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story