குன்றத்தூர்: திமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிர்வாகிக்கு அடி உதை
திமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிர்வாகி சட்டை கிழிந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததார்.
பூந்தமல்லி:
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட 15 வது அமைப்பு தேர்தல் 10 ஒன்றிய நிர்வாகிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் குன்றத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் குன்றத்தூர், காட்டாங்கொளத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட 10 ஒன்றிய நிர்வாகிகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது திருப்போரூர் ஒன்றியத்தை சேர்ந்த ரோஸ் நாகராஜன் என்பவர் ஒன்றிய செயலாளருக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது அங்கிருந்த திருப்போரூர் ஒன்றிய நிர்வாகிகள் அவரை அடித்து தாக்கினார்கள்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பனியில் இருந்த போலீசார் அவரை அங்கிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் அவரது சட்டை கிழிக்கப்பட்டு, லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து நாகராஜன் குன்றத்தூர் போலீசில் தனது ஆதரவாளர்களுடன் சென்று புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ரோஸ் நாகராஜன் சட்டை கிழிந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா அங்கு சென்றார். அப்போது புகார் அளிக்க வந்த நபர் கிழிந்த சட்டையுடன் இருப்பதை கண்டு தனது காரில் இருந்த புதிய சட்டையை கொடுத்து மாற்றி கொள்ளும்படி கொடுத்தார்.
திருமண மண்டபத்தில் நுழைவாயில் பூட்டப்பட்டு சிறிது நேரம் போலீஸ் பாதுகாப்புடன் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.