'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரதம்: சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு


நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரதம்: சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
x

கோப்புப்படம்

‘நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் கூட்டத்தை சமீபத்தில் நடத்தினார். அப்போது அவர், 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போதும் கையெழுத்திட மாட்டேன் என்று ஆவேசமாக கூறினார்.

இதற்கிடையே 'நீட்' தேர்வில் தோல்வியடைந்த சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் அவருடைய தந்தை செல்வசேகரும் உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால் 'நீட்' தேர்வு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

உண்ணாவிரத போராட்டம்

'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள 'நீட்' தேர்வைத் திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, கவர்னரை கண்டித்தும், 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரியும் தி.மு.க.வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் 20-ந் தேதி (இன்று) மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

'நீட்' தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் தன்னார்வலர்களும், பொதுமக்களும் தங்களின் மேலான கருத்துகளை எடுத்துரைப்பார்கள். அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை உள்ளிட்ட தி.மு.க.வின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் கலந்துகொள்கிறார்கள். உண்ணாவிரத அறப்போராட்டப் பணிகளை இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணிகளின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.

சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த அறப்போராட்டத்தை தி.மு.க. பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைக்கிறார். இதில் தி.மு.க. மாணவர் அணி செயலாளர் எழிலரசன், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கனிமொழி, செயலாளர் டாக்டர் எழிலன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், சிற்றரசு, வேலு, இளைய அருணா, தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், எம்.சண்முகம், டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.கிரிராஜன், இளங்கோ, வில்சன், மாணவர் அணி இணை செயலாளர் மோகன், இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி எதிரே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைக்கிறார். காஞ்சீபுரம் மாவட்டம் பெரியார் தூண் காந்தி சாலையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சுந்தர், செல்வம் எம்.பி., இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல் மாலிக், மருத்துவர் அணி துணை செயலாளர் கலை கதிரவன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி முடித்து வைக்கிறார்.

திருச்சி ரெயில் நிலையம் எதிரே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் கே.என்.நேருவும், திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் எதிரே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் எ.வ.வேலுவும், திருவாரூர் ரெயில் நிலையம் எதிரே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தூத்துக்குடி சிதம்பரம் நகர் பஸ் நிறுத்தம் அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மருத்துவர் அணி துணை செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் முடித்து வைக்கின்றனர்.

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தம் அருகே அடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன், திருப்பூர் ரெயில் நிலையம் அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தஞ்சை தபால் நிலையம் எதிரே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராமநாதபுரம் அரண்மனை அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன், சிவகங்கை அரண்மனை வாசல் அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் பெரியகருப்பன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.


Next Story