வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 25 March 2024 9:29 AM GMT (Updated: 25 March 2024 9:30 AM GMT)

வட சென்னை தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. வேட்புமனுக்கள் 20-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வேலை நாட்களில் தினமும் காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை மட்டும் பெறப்படும்.

கடந்த வாரம் முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு போன்றவற்றில் மும்முரமாக இருந்ததால், ஒரு சில சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 27-ந்தேதி ஆகும். மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இன்று தி.மு.க உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொடங்கி உள்ளனர்.

அதன்படி, வட சென்னை தொகுதியில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ ஒரே நேரத்தில் வந்தனர். இதனால், யார் வேட்பு மனுவை முதலில் பெறுவது என குழப்பம் ஏற்பட்டது. அ.தி.மு.க வேட்பாளர்தான் முதலில் வந்ததாக தேர்தல் அதிகாரி கூறியும் அதனை சேகர் பாபு ஏற்க மறுத்தார்.

இதனால், சேகர் பாபு - ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக வேட்பு மனு தாக்கல் செய்வது தாமதம் ஆனது. இதற்கு மத்தியில் பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் வேட்பு மனு தாக்கல் செய்ய அங்கு வந்தார். இதனால், வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் பரபரப்பாக காட்சி அளித்தது. முதலில் சுயேட்சை வேட்பாளரிடம் வேட்பு மனுவை வாங்கிவிட்டு அதன்பிறகு டோக்கன் அடிப்படையில் வேட்பு மனுவை பெறுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார். இதனை தி.மு.கவும் அ.தி.மு.கவும் ஏற்றுக்கொண்டு சமரசத்துக்கு வந்தன.

இந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று கூறினார்கள். நாங்கள் தான் முதலில் வந்தோம். நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தயாரானபோது, திடீரென தி.மு.க.வினர் வந்தனர். எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தி.மு.க.வினர் திபுதிபுவென உள்ளே வந்தனர். அ.தி.மு.க. சார்பில் 5 பேர் தான் சென்றோம்; தி.மு.க.வினர் 8 பேர் வந்தனர்.

மரபை பின்பற்றாமல் எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தி.மு.க.வினர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதலில் வந்தவர்கள் என்று பார்த்தால், எங்களை தான் அனுமதித்திருக்க வேண்டும். அ.தி.மு.க. தான் முதலில் வந்ததாக கூறிய தேர்தல் அலுவலரையும் தி.மு.க.வினர் மிரட்டினர். வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story