ஓட்டுக்கு காசு கொடுக்கிற திட்டங்களை தி.மு.க. செயல்படுத்தி வருகிறது; சீமான் குற்றச்சாட்டு


ஓட்டுக்கு காசு கொடுக்கிற திட்டங்களை தி.மு.க. செயல்படுத்தி வருகிறது; சீமான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Sep 2023 7:54 PM GMT (Updated: 26 Sep 2023 11:33 AM GMT)

ஓட்டுக்கு காசு கொடுக்கிற திட்டங்களை தி.மு.க. செயல்படுத்தி வருகிறது என்று சீமான் குற்றம்சாட்டினார்.

பெரம்பலூர்

கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு தயார்படுத்துவதற்காக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட வாரியாக தொகுதி கலந்தாய்வு கூட்டம், பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறார். அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தங்க.ரத்தினவேல் (பெரம்பலூர்), கப்பல்குமார் (அரியலூர்) மற்றும் பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டணியில் இருந்து விலக வேண்டும்

முன்னதாக சீமான், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சனாதனத்தை நாம் தமிழர் கட்சியும் எதிர்க்கிறது. அதனை ஒழிக்க ஒவ்வொருவரும் போராட வேண்டும். சனாதனத்தை ஒழிக்க தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை. ஜெயலலிதா கூட சனாதனத்தை ஒழிக்க முயற்சி செய்தார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க.வும், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க.வும் விலகினால் வரவேற்பேன். காவிரி நதி நீர் பங்கீட்டில் பிரச்சினை உள்ளதால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலக வேண்டும்.

நாம் தமிழர் கட்சியை ஆட்சியமைக்க அதிகாரம் கொடுத்தால் காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வெறுக்கிறேன். ஓட்டுக்கு காசு கொடுக்கிற திட்டங்களை தி.மு.க. செயல்படுத்தி வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தலா 20 தொகுதிகள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒதுக்கப்படும்.

தனித்து போட்டி

தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை தவிர நாம் தமிழர் கட்சியின் நோக்கம், தத்துவம், கொள்கையை ஏற்றுக்கொள்ளும் வேறு அமைப்புகள் வந்தால் கூட்டணி பற்றி யோசிப்பேன். தற்போது இது சாத்தியமில்லை. இதனால் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி வந்தவர்கள் சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். முன்னதாக சீமான், பெரம்பலூர் நான்கு ரோடு அருகே நாம் தமிழர் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.


Next Story