பிரதமர் மோடிக்கு தி.மு.க. எம்.பி டி.ஆர்.பாலு எச்சரிக்கை


பிரதமர் மோடிக்கு தி.மு.க. எம்.பி டி.ஆர்.பாலு எச்சரிக்கை
x

தி.மு.க.வை இல்லாமல் ஆக்கிவிடுவோம் என கூறியவர்கள், எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள் என்று தி.மு.க. எம்.பி டி.ஆர்.பாலு கூறினார்.

சென்னை,

தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசுமுறைப் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, தாம் பிரதமர் என்பதையே மறந்து, அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது உரையைப் பார்த்தபோது, அவரை நினைத்துப் பரிதாபமாக இருந்தது. பதவி நாற்காலி காலியாகப் போகும் இறுதிக் கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து அவர் முறுக்கி, முறுக்கி பேசத் தொடங்கி இருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு இந்தப் பத்தாண்டு காலத்தில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டிருந்தால் அவரைப் பாராட்டலாம். பத்தாண்டு காலத்தில் இந்திய நாட்டுக்குச் செய்து காட்டிய வளர்ச்சியைச் சொல்லி இருந்தால் வரவேற்கலாம். அப்படி எதுவும் இல்லாததால், திருப்பூர் கூட்டத்தில் ஜெயலலிதாவை வானளாவப் புகழ்ந்தும், திருநெல்வேலி கூட்டத்தில் தி.மு.க.வைக் கடுமையாக விமர்சித்தும் பேசிவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் மோடி.

ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்ததாகப் பிரதமர் பேசியிருப்பதைப் பார்த்துத் தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள். மோடி நிலைமை இந்தளவுக்குப் போய்விட்டதே என்று கேலி செய்கிறார்கள். "பதவிக்காக எந்தளவுக்குத் தரைக்கு இறங்கிவிட்டார் பிரதமர்" என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதமர் மோடி. தி.மு.க மீதும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் பிரதமருக்கு இவ்வளவு கோபம் ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாதது அல்ல. தனக்கு எதிரியே இல்லை என்ற இறுமாப்பில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து 'இந்தியா' கூட்டணி அமைக்க அடித்தளம் அமைத்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதுதான் பிரதமர் மோடியின் கோபத்துக்குக் காரணம்.

மோடி ஏதோ சாதித்து விட்டாராம், அவரது சாதனையைத் தமிழ்நாட்டில் தி.மு.க மறைக்கிறதாம். இப்படி புலம்பி இருக்கிறார் பிரதமர். அவர் எந்தப் பகுதியில் பேசினாரோ அந்தப் பகுதியின் தொழில் வளத்தையே சிதைத்தது மத்திய பா.ஜ.க அரசுதான்.

நெல்லையில் 'அல்வா'வை நினைவூட்டி இருக்கிறீர்கள். பேரிடர் நிதியைக் கூட தராமல் 'அல்வா' கொடுக்கும் மோடி ஆட்சிக்கு இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் 'அல்வா' கொடுப்பார்கள். இந்தியாவின் முன்னேற்றத்தைப் பேசுவதைவிட, 'இந்தியா' கூட்டணியின் முன்னேற்றத்தைக் கண்டு தாங்க முடியாமல் மணிக்கொரு முறை இந்தியா கூட்டணிக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.

என்னுடைய சாதனைகளை அச்சிடவிடாமல் நாளிதழ்களைத் தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க அரசு தடுக்கிறது. மக்களிடம் சென்று அடையாமல் தொலைக்காட்சிகளையும் தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்துகிறது'' எனப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. காலை, மாலை பேப்பர்களைப் படிக்கக்கூட உங்களுக்கு நேரமில்லையா பிரதமரே! அந்த தினசரிகளைக் கொஞ்சம் புரட்டி பாருங்கள். எல்லாத் தலைப்பு செய்திகளிலும் நீக்கமற நீங்கள்தான் நிரம்பியிருக்கிறீர்கள். நேரலை, விவாதங்கள், விறுவிறு செய்திகள், சிறப்புச் செய்திகள் எனத் தொலைக்காட்சிகள் முழுவதும் மோடி பற்றிய செய்திகளைத்தான் இரண்டு நாளும் வாசித்தன.

நாளிதழ்களை, தொலைக்காட்சிகளைத் திமுக கட்டுப்படுத்துகிறது'' என எப்படி வாய் கூசாமல் சொல்கிறீர்கள். பொய்களை சொல்லவும் ஏமாற்றத்தைத் தூண்டவும்தான் பிரதமருக்கு அதிகாரம் தரப்படுகிறதா? மாநிலங்களை ஒடுக்குவதில் ஹிட்லராகவும், பொய்களைப் புனைவதில் கோயபல்ஸாகவும் என இரண்டுமாகவே ஆகிவிட்டார் அவர்.

தி.மு.க.வை இனிப் பார்க்க முடியாது. இனித் திமுக எங்குத் தேடினாலும் கிடைக்காது'' எனச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. தி.மு.க. அழிந்து போகும். தலைதூக்காது என தி.மு.க. உருவான 1949-ம் ஆண்டில் இருந்து இன்று வரை 74 ஆண்டு காலமாகப் பலர் பேசிக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது.

தி.மு.க.வையே இல்லாமல் ஆக்கிவிடுவாராம். சவால் விட்டுள்ளார். இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். அந்த வரிசையில் அவரும் விரைவில் இணைந்துவிடத்தான் போகிறார் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story