தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு


தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 29 Feb 2024 5:57 AM GMT (Updated: 29 Feb 2024 7:12 AM GMT)

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து முதல்- அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்னரே, தி.மு.க. தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது.

கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், கடந்த 24-ம் தேதி 2-வது கட்ட பேச்சுவார்த்தையை தி.மு.க. தொடங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய 2 கட்சிகளுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த சூழலில், மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே திமுக இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. முதல்- அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story