வீட்டில் சிகிச்சை பெற கூடாது காய்ச்சல், சளி ஏற்பட்டால் டாக்டர்களை அணுக வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வீட்டில் சிகிச்சை பெறாமல் காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் டாக்டர்களை உடனடியாக அணுக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தாம்பரம் காசநோய் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கு நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா அதிகரித்து வரும் மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறோம். இந்த காசநோய் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை அளிக்க கூடிய 100 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதுபோல் அருகில் உள்ள சித்த ஆஸ்பத்திரியிலும் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 95 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 88 சதவீதமாக உள்ளனர். மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கொரோனாவால் உயிர் இழப்பு தமிழகத்தில் 3 மாதமாக ஏற்படவில்லை நேற்று தஞ்சாவூரில் 18 வயது பெண் ஒருவர் இறந்து உள்ளார். காய்ச்சலோ, சளி, இருமல் போன்றவை ஏற்பட்டால் பொதுமக்கள் வீட்டில் சிகிச்சை பெறாமல் உடனடியாக டாக்டர்களை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பரவி வந்தாலும் அதன் சதவீதம் குறைவாகவே உள்ளது. தற்போது தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்
இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.