போகி பண்டிகையன்று டயர், பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க வேண்டாம் -விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்


போகி பண்டிகையன்று டயர், பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க வேண்டாம் -விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 Jan 2024 8:36 PM GMT (Updated: 12 Jan 2024 7:56 AM GMT)

போகி பண்டிகை தினத்தன்று விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள், டயர் உள்ளிட்டவைகளை எரிக்க வேண்டாம் என விமான நிலைய ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மீனம்பாக்கம்,

சென்னை விமான நிலையத்தை சுற்றி உள்ள பல்லாவரம், மீனம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பஜார், தரைப்பாக்கம், மணப்பாக்கம், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் போகி பண்டிகை தினத்தன்று அதிகாலையில் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள், டயர் உள்பட பழைய தேவையற்ற பொருட்கள் எரிக்கப்படும். இவ்வாறு எரிப்பதால் அதிக அளவில் புகை மண்டலம் ஏற்பட்டு விமான நிலைய ஓடு பாதைகளை சூழ்ந்து கொள்கிறது. அதிகாலை நேரத்தில் ஏற்படும் பனிமூட்டமும், புகை மூட்டமும் விமான நிலைய ஓடுபாதையை மூடிவிடுவதால் விமான சேவை பாதிக்கப்படுகிறது. இதனால் விமான பயணிகள் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.

எனவே வருகிற 14-ந்தேதி போகி பண்டிகை தினத்தன்று விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள், டயர் உள்ளிட்டவைகளை எரிக்க வேண்டாம் என விமான நிலைய ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக இயக்குனர் தீபக், விமான நிலையத்தை சுற்றி உள்ள குடியிருப்பு மக்களுக்கு பொங்கல் வாழ்த்துடன் எழுதி உள்ள கடிதத்தில், "பழையன எரிப்பதால் பெருகும் புகை மண்டலம் பகலவனை மறைத்து பல செயல்கள் முடங்கும் விளைவுகள் அறியாமல் விதைத்திடும். சுற்றுச்சூழல் மாசு, காதார சீர்கேடு ஏற்படுவதுடன் விமான போக்குவரத்தும் வீணாக தடைபடும். எனவே பிளாஸ்டிக் மற்றும் டயர்கள் எரிப்பதை தவிர்ப்போம். பிறரையும் தடுப்போம். புகையில்லா போகியை கொண்டாடி மகிழ்வோம்" என கூறியுள்ளார்.


Next Story